
தொலைத்தூர புதுப்புது கிரகங்கள் தேடுகின்றான்
வானத்திலும் கூடுகட்டி குடியேறிட நினைக்கிறான்
தொலைந்துவிட்ட பழைய வாழ்க்கையை திருப்பித்தர
முடிந்திடுமா காலந்தோறும் ஆராய்ச்சிகள் நடத்தியே
ஓடிப்பிடித்து ஆடிப்பாடி மகிழ்ந்திட்ட காலமொன்று
கண்ணிவைத்து காட்டிற்குள் வேட்டைக்கும் சென்றதுண்டு
தேடித்திரிந்து கூட்டாஞ்சோறு ஆக்கித்தின்ற காலமுண்டு
நினைக்கையில் மனத்திரையில் விழியோரம் நனைந்திடவே
பல்லாங்குழி டுக்குபறி குண்டித்தல் கபடியாட்டம்
கண்ணாமூச்சி என்று பல விளையாட்டு கும்மாளம்
தொல்லையிலா இளமழலைப் பருவக்கால குதூகலம்
நீங்கவொனா ஏக்கங்களாய் இனியநல் நினைவுகளில்
காய்ச்சலுக்கு பலியானால் வளர்த்தகோழி குழம்பாகும்
இன்றுபோல அன்றில்லை விதவிதமாய் கேளிக்கை
மேய்ச்சலுக்கு ஆடுகட்டி புல்லறுத்த காலம்போய்
ஓய்ச்சலின்றி உழைக்கின்ற உலகம்மாறி போனதன்றோ!



kavithai…………..kavithai