Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஏப்ரல், 2008

எதுக்குடா இந்த மானம் கெட்ட பொழப்பு..?!

தடுக்கி விழுகிரவள தாங்கிப்புடிச்சா love வருதுறா…. என்னக்கருமமோ…

 

 

Advertisements

Read Full Post »

இது இத்தொடரின் கடைசிப் பதிவு. 

முந்தய பதிவுகளை படிக்க இங்கே சுட்டவும் பகுதி1 பகுதி2                                                

                                                            (பொன்னியின் செல்வன்)

வானதி  பொன்னியின் செல்வன் மேல்  கொண்ட  காதல்

சிறுபிராயத்திலேயே  தாயை  இழந்து , பின்  தந்தையையும்  சீக்கிரமே  பறி  கொடுத்துவிட்டு  அன்புக்கு  ஏங்கி  நின்ற  இந்த  சிறு  பெண்ணுக்கு, வாழ்வில்  ஒரே  பிடிப்பு  என்பது  தாய்  பாசத்தையொத்த இளைய  பிராட்டியின்  அன்பு  தான் … பருவம்  வந்த  பின்னும்  கூட,  குந்தவைக்கு  அவள்  குழந்தையாகவே  தெரிந்தாள் … 

ஆனால்  வல்லிய  விதியானது  அவளையும்  விட்டுவிடவில்லை … வந்தது  ஒரு  காட்டுப் பூனையின் ரூபத்தில்…. பூனையோடு பொருந்த  (அதாவது சண்டையிட ….) யானை  மேல்  வந்தான்  ஒருவன் … வேடிக்கையாக  இல்லை ? ஆனால்  கேவலம்  பறவை  இனமென்று  பாகுபாடு  பாராமல் , அந்த  இளம்  குஞ்சுகளின்  உயிரைக் காத்த அந்த கருணைமிகு இதயம் … யாராக இருப்பன் அந்த  யானைப் பாகன்?  களங்கமில்லா  தூய  பால்  போன்ற  அவள்  மனதை  கொள்ளை  கொண்டவன்  யார் ? என்ற  எண்ணங்கள்  அவளுக்குள்  மீண்டும்  மீண்டும்  தோன்றி  அவளை  இன்பமாக  வதைத்தன …
 
வெளி  உலகம்  என்றால்  என்ன  என்பதையே  அறியாது , கொடும்பாளுர்  ஒன்றே உலகம்  என்று  வளர்ந்து  வந்த 
ஒரு  அறியாப்பெண்; காதல், களவு  போன்றவற்றை  கனவில்  கூட  எண்ணிப்பார்த்திராதவள் … அதனால் … கள்ளம் , கபடம் , கவலை  ஏதும்  இன்றி  மனம்  போல்  ஆடிப்பாடி , களிப்பில்  மூழ்கிக்  கிடந்தவளின்  உள்ளத்தில்  இப்போது  ஏதோ  ஒரு  பெரும்  மாற்றம் … மானைப்  போல  துள்ளிக்கொண்டு  திரிந்த  கால்களில்  இன்று  ஒரு  சிறிய  தயக்கம், தடுமாற்றம் … தோகை  விரித்தாடும்  மயிலைப்போல  வான  வெளியெங்கும்  சுதந்திரமாக  சுற்றி  வந்த  அவளின்  மனம்  இன்று  கூண்டில்  அடைபட்ட  கிளியாக  ஆகிவிட்டது  ஏன் ?
 
குளத்தில்  விழும்  கல்  தண்ணீரில்  வட்ட  வட்டமாய்  அழகிய  அலைகளை  எழச்செய்வது  போல் … அவளின்  உள்ளத்தடாகத்தில்  ஒரு  அழகிய  வீர  திருமுகம்  இன்ப  அலைகளை  எழுப்பி  விட்டிருக்கிறது …. அந்த   அனுபவம்  அவளுக்குப்புதிதாக  மற்றுமின்றி  புதிராகவும்  இருந்தது … புரியாத  சிலவற்றில்  தான்  போதையும் , ஈடுபாடும்  அதிகம்  உண்டாகும்  என்பது  உண்மையோ?  தான்  கொடும்பாளூர்  இளவரசி  என்று  அறிந்ததும்  அவன்  கோபம்கொண்டு விருட்டென்று   திரும்பிச் சென்றது  ஏன் ? மீண்டும்  சந்தித்தால்  அவன்  ஏன்  அவ்வாறு  கோபம்  கொண்டான்  என  கேட்கவேண்டும் … அந்த  யானைப்பாகனை  மறுபடியும்  காண  முடியுமா ? என்றெல்லாம்  அந்த  சிறுபெண்ணின்  உள்ளத்தில்  பலவிதமான  எண்ணங்கள்  அலை  மோதின …
 
ஆனால் …  அவன்தான்  இந்த  நாட்டு  மக்களின்  ஆத்மார்த்தமான  அன்புக்கு  உரியவன் … அரசற்கு  அரசர்களை  எல்லாம்  அடி  பணிய  வைக்கும்  அஞ்சா  நெஞ்சன் , வீரத்தில் , கருணையில் , அழகில்  இந்த  அகிலமே  போற்றும்  `அருள்  மொழி  வர்மன் ‘… என்ற  உண்மை  அவள்  உள்ளத்தில்  பேரிடியாக  இறங்கியது … நாடே  போற்றும்  இளவரசரை , கேவலம்  ஒரு  யானை  பாகன்  என்று  நினைத்தோமே ? இந்த  அரசே  அவனுடையது … அவனுக்கே  அரசாங்க  உத்யோகம்  வாங்கித்தருவதாக  சொன்னோமே … என்ன  வேடிக்கை , இல்லை .. மூடத்தனம் ? என்றெல்லாம்  அவள்  நினைத்து  உள்ளம்  கலங்கிக்கொண்டிருந்த வேளையில், அவன்  முன்னே  தீபம்  ஏந்தி  நின்று , அவனை  வாழ்த்தி , வெற்றி  மலை  சூட்டி  வழியனுப்ப  வேண்டும்  என்றால் ? …  

(வானதி)
 
தயக்கமும் , குற்ற  உணர்வும் , அவற்றோடு  பெண்களுக்கே  உரிய  இயற்கையான  அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பென்னும் நால்வகை  உணர்ச்சிகளும்  ஒருங்கே  உந்தித்தள்ள , அவன்  தன்னை  ஏறெடுத்துப்பார்த்த அந்த  நொடியில் , அவள்  தன்வசம் இழந்து  மூர்ச்சை  ஆகிச் சரிந்தாள் …  ஆனால் … இது  அபசகுனத்திற்கான   அறிகுறியல்ல … அவளை  அவன்  எப்போதும்  நினைவில்  வைத்திருக்க  தூண்டும்  நல்லதொரு  சந்தர்ப்பம்  என்பதையோ … அவனும் , இப்படி  ஒரு  விசித்திரப்பெண்ணை  முதன்  முதலில்  பார்த்ததைத்  தன்  ஆயுள்  முழுவதும்  மறக்கப் போவதில்லை  என்பதையோ …, பாவம் , அப்பேதை  அறியாள் … 

அவனை  ஒரு  வேலைக்காரன்  என்று  பரிகாசம்  செய்தது , அவன்  போர்க்களம்  போகும்  சமயத்தில் , விபத்து  போல்  தீபத்தை  தவற  விட்டது  என்பதையே  அவள்  மனம்  நினைத்து  கொண்டிருக்க … அந்த  நினைவுகளே  அவன்  மீது  அளப்பெரும் காதலாக  உருப்பெற்று  வளர்ந்து  வருவதை  அவள்  அறிந்திறாள் ….  இருந்தாலும் , அவனை  மணந்து  கொள்ள  இந்த  சோழ  நாட்டின்  ஒவ்வொரு  கன்னிப் பெண்ணும்  விரும்புவாள் … அதையே  தான்  செய்தால் … பட்டமகிஷி  ஆகும்  எண்ணத்திலேயே !!!  என்ற  ஏளனப்பேச்சும் வரும் … யானைப்  பாகனாகவே  அவன்  இருந்திருக்கக்கூடாதா ?… “நான்  அவனை  யானைப்பாகனாக  இருக்கும்போதே  விரும்பினேன் … அவன்  இளவரசனா  என்று  அப்போது  எனக்கு  தெரியாது … அதைப்பற்றிய கவலை அப்போது  அல்ல  எப்போதும்  எனக்கு  இல்லை , அவன்  அன்பு  ஒன்றே  ஏன்  பிறவியின்  பயன் , அவன்  இதயமே  எனக்கு  அரியாசனம் “… என்றெல்லாம்  அடிக்கடி  தனக்குத்தானே பேசிக்கொண்டு , தன்  காதலுக்கு  உரமேற்றி  வளர்த்துவந்தாள்  …. பிரதிபலன்  எதுவும்  எதிர்  பாராத  காதல்  தன்னுடையது  என்று  நிரூபிக்க  ஒரு  தருணம்  வாராதா  என்று  வாடி  வருந்திக்கொண்டிருந்தாள்  …
 
அத்தகையவனை …ஒரு  நாள்  கடல்  கொண்டு  விட்டது  !! என்ற  செய்தி  வந்தால்? … அதை  அவள்  காதுகள் கேட்டனவா ? இல்லை , அதற்கு  முன்னமே  அவள்  உயிர்  அவளிடத்தில்  இல்லை  என  அறிந்து  கொண்டாள் … இனி  யோசிக்க  என்ன  இருக்கிறது ? இந்த  உடம்பேனும்  கூட்டைப்பற்றி இனி  என்ன  கவலை ? அவனோடு  வானவெளியில்  நட்சத்திரமாக  ஜொலித்திருக்கவும் , சோலைத்தென்றலோடு  கூடவே  சேர்ந்து  வரும்  பூக்களின்  நறுமணம்  போல , அவன்  ஆவியோடு  சுற்றித்திரிந்திருக்கவும்  அவள்  தயாராகி  விட்டாள் … ஓடையில்  பாய்ந்து  தன்  உயிரை  விட்டுவிட  துணித்து  விட்டாள் … ஐயோ  பாவம் , … அது  கைகூடவில்லையே … தன்னைக் கரை ஏற்றிக்காப்பாற்றி, தன்  உள்ளம்  கவர்ந்தவனோடு  தன்னை  சேர விடாமல்  பிரித்தது  யார் என்று  தெரிந்து கொள்ள  அவள்  விரும்பாததில்  என்ன  ஆச்சரியம் ? ஆனால் …அவனை  கடல்  கொண்ட  செய்தி  உண்மையல்ல  என்று  அறிந்ததும்  உண்டான  இன்பத்துக்கு  அளவே  இல்லை … ஆஹா … ஒரு  நொடியில்  எவ்வளவு  பெரிய  தவறு  செய்ய  இருந்தோம்  என  எண்ணி  மகிழ்வதற்குள் … அவன்  இன்னொரு  பெண்ணை  நேசித்துக்கொண்டு  இருக்கலாம்  என்று  கேட்கும்  படி  நேர்ந்ததே … என்ன கொடுமை  !!! போகட்டும் … அவன்  யாரை  விரும்பினாலும் … என் காதல்  மாறாது … அவன்  உயிரைக்காத்த  பெண்ணை  அவன்  விரும்புவதில்  தவறு ஒன்றுமில்லை  …. ஆனாலும் , தான்  தன்  தூய  அன்பைக்காட்ட  ஒரு  வாய்ப்புக்கூட  கிடைக்கவில்லையே  என்று  எண்ணி  அவள்  இன்னும்  வேதனைப்பட்டாள்  …
 
அன்று  ஒரு  நாள் , காவிரித்தாய் , கரை  புரண்டு  பொங்கி  வந்த  தன்  அன்பினால் , அவளை குடந்தை  ஜோதிடர்  வீட்டுக்கூரையோடு  சேர்த்துக்கொண்டு  சென்ற  போதும்,  தன்  உயிரைப்பற்றிய  கவலை  சிறிதும்  அவளுக்கு  இல்லை … ஆனால் , தன்னை  மீட்க  வெள்ளத்தில்  குதித்த அந்த  ஓடக்காரப்பெண்ணை  தான்  காப்பாற்ற  வேண்டும் , அவள்  இளவரசருக்கு  செய்த  உதவிக்கு , பிரதி  உதவியாக  தான்  அவளைக்காப்பற்றியாக வேண்டும் , இளவரசரின்  மேல்  உள்ள  தன்  மெய்  அன்பை  நிரூபிக்க  இது  போல்  ஒரு  பொன்னான  தருணம்  என்றும்  அமையப்போவதில்லை  … அந்த  முயற்சியில்  தான்  இறக்க  நேரிட்டாலும் , மரணத்தை  மனமுவந்து  ஏற்றுக்கொள்ள வேண்டும் , அதை  இளவரசர்  உணரும்  போது  அவர் கண்களில் துளிர்க்கும் ஒரு  சொட்டு கண்ணீர் மட்டுமே  தனக்குப்போதும் … என்று  எண்ணியே  பூங்குழலியை  அவள்  முதலை  வாயினின்று  காப்பாற்றினாள்… 
  … 

ஆனால் அவள்  விஷயத்தில்  விதியின்  விளையாட்டுகள்  இனிதாகவே  இருந்தன …. தன்  மனம் கொண்ட நாயகனும்  தன்னை  நினைத்து  அல்லும்  பகலும்  மருகுகிறான்  என்று  அறிவதை  விட  ஒரு  இனிய  செய்தி  வேறு  என்ன  இருக்க  முடியும் ? அதை  அவன்  வாயினாலேயே  கேட்கும்  போது , அந்த  நொடிக்க்காகவே  தான் உயிர்  வாழ்ந்திருப்பதாக  அவள்  நினைப்பதில்  வியப்பொன்றும்  இல்லையே ? 

தன்  காதலன்  இறந்த  செய்தி  கேட்டு  தன்னுயிரை  விட்டுவிடத்துணிந்தவள் , தன் காதலனைக் காப்பாற்றியவளை தான்  காப்பாற்றி,  அவன் நன்றிக்கடனை  தீர்க்க  தன்  உயிரையும்  கொடுக்க  முன்வந்தவள், தன்  காதல்  அவன்  மீது  தானே  ஒழிய  அரியாசனத்தின்  மீதில்லை  என்ற  சபதத்தில்  இருந்து  வாழும்  வரை  வழுவாமல்  இருந்தவள் … அந்த  உத்தமியின்  காதல்  சாலச்சிறந்தது  என்பதில்  சந்தேகம் என்ன?  ….      

முற்றும்..

பொன்னியின் செல்வன் ஒரு அமுத சுரபியை போன்ற நாவல்… எழுதுவதற்கு இன்னும் நிறைய உள்ளன…

எ.கா: 1) மணிமேகலை வந்தியதேவன் மேல் கொண்ட காதல்

2) ஊமை ராணி சுந்தர சோழர் மேல் கொண்ட காதல்

3) பூங்குழலியின் காதல்

4) நந்தினியின் காதல்

இன்னும் நிறைய உள்ளன. காதலை தவிர்த்து மற்ற கண்ணோட்டதிலும் எழுதலாம்.

நன்றி.

 

Read Full Post »

  முதல் பாகம்   இங்கே சுட்டவும்                                                               

                                     (வல்லவரையன் வந்தியத்தேவன்)

குந்தவை வந்தியத்தேவன் மேல் கொண்ட காதல்
ஆனால்  விதி  யாரை  விட்டது … எந்த  நொடியில்  அவள்  வந்தியத்தேவனைச்சந்தித்தாளோ குடந்தை  ஜோதிடர்  வீட்டில்… அப்போது  தான்  அவள்  “பெண்மை”  பூத்ததை அவளே அறிகிறாள். வியப்பால்  அகன்று  விரிந்த  தன்  பெரிய  கண்களால் அப்படியே  வந்தியதேவனை விழுங்கி  விடுவதுபோல் பார்க்கிறாள் … அவனது களை ததும்பும் திருமுகத்தைக்கண்டதும்  தன்னையே இழக்கிறாள் … தன்னையும்  அறியாமல்  மெல்லிய  இளம்  காதல்  துளிர்  விடுவதை  உணர்கிறாள் …
 
ஆனால்  ஏதோ  ஒன்று  தடுக்கிறதே ? அது  என்ன ?… பாராளும்  மன்னன்  மகள் தான், அவனோ  ஒரு  வழிப்போக்கன்  அவ்வளவே … தங்கள் காதல் பொருத்தமானதா என்று  மனதுக்கும் , புத்திக்கும்  ஒரு  பெரும்  போராட்டம் அவளுக்குள்  தொடங்குகிறது ….
 
ஆனாலும்  மனமே  வெல்கிறது … தன்னுடைய  நிலையில்  இருந்து  அவள்  ஒரு போதும்  இறங்கி  வர  இயலாது … தனக்கு  இருக்கும்  பொறுப்புகளை அவள் தட்டிக்கழிக்க முடியாது … எல்லா  சாதரண  பெண்களையும் போல காதலனே  உலகம்…  என்று  அவனை  நினைப்பதையே  முழு  நேர  தொழிலாக (வானதி, மணிமேகலை மற்றும் பூங்குழலி போல்) அவள்  செய்ய  முடியாது … அதனால்  அவள்  காதலை  மறைத்து  வைக்க  முயல்கிறாள் … அதில்  ஓரளவு வெற்றியும்  பெறுகிறாள் … காதல்  வயப்பட்ட  தன்  மனதை  வந்தியத்தேவனிடம் பெரும்பாலும்  அவள்  வெளிக்காட்டிக்கொள்வதில்லை … ஆனால் , சரியான தருணங்களில் , அதை  அவள்  வெளியிட  தயங்கவும்  இல்லை … (சிறைச்சாலையில் , பொன்னியின் செல்வனுக்கு ஓலை  கொடுத்து  அனுப்பும்   போது , சின்னப்பழுவேட்டரயரை  தேடிச்சென்று திரும்பி வந்து  வந்தியத்தேவன் அவளை பார்க்கும்போது … )
                  
              (குந்தவை)
தான்  சோழ  நாட்டிலேயே  இருக்க  வேண்டும்  என்பதற்காக  அவள்  வந்தியத்தேவனைப்போல்  ஒரு அனாதையைக்காதலிக்கவில்லை … அவன்  தனக்கு  அடிமை  போல்  இருப்பான் என்று  அவனை  மணம்  செய்து  கொள்ள  விரும்பவில்லை … அவ்வளவு  சுயநலம் பிடித்தவளும் இல்லை  அவள் … ஆனால்  சோழ  நாட்டின்  மீது  கொண்ட  அன்பால்  அவள் கட்டுண்டு  கிடந்தாள் … அது  அவளே  அவளுக்கு  இட்டுக்கொண்ட  விலங்கு …
 
பெரிதாக பிரஸ்தாபித்தால்தான்  காதல்  உயர்ந்ததா  என்ன ? இது  இரு  ஜோடி  கண்களின்  மௌன  கீதம் … ஒரே  எண்ணம்  உடைய  இரு  மனங்களினின்று  எழும் இனிய  ராகம் … அவர்கள்  பேசிக்கொள்ளத்தேவை  இல்லை … அவர்களின்  மனங்கள் இணைந்து விட்டதை  அவர்கள்  இருவருமே  நன்கு  அறிவார்கள் … இது ஒரு மென்மையான, மேன்மையான காதல் ….
தொடரும்…

Read Full Post »

                                    

                                              

                                                        (முகப்பு அட்டை)

தலைப்பு: பொன்னியின் செல்வன்

ஆசிரியர்: கல்கி

நயம்: சரித்திர நாவல்

பதிப்பகம்: வானதி

                           வந்தியத்தேவன் குந்தவை மேல் கொண்ட காதல்
விபத்து  என்பார்களே… அது  இதுதானோ? … அதுவும்  விபத்தின்  முடிவு  இன்பமானதாக  இருந்துவிட்டால்?  … அதுதான்  நம்  நாயகனுக்கு  நேர்ந்தது… குடந்தை  ஜோதிடர்  வீட்டில்  அவன்  கண்டது  என்ன? சோதிடரையா? வானதியையா? இல்லவே  இல்லை … குந்தவையின்  பொன்முகம்  ஒன்றைத்தான் … ஆயிரம்  காவியங்கள்  புகழ்ந்து  பாட  ஒண்ணாத  அவள்  அழகிய  திருமுக  மண்டலத்தைத்தான் … அதுவரை  அவனுக்குள்  இருந்த  இதயம்  வெளியேறி, அவன் எதிரில், வியப்பும், மகிழ்ச்சியும் ஒரு  சேரப்பொலிந்த குந்தவையின்பால் சென்று  கலந்தது…
 
அவள்  இளவரசியோ  அல்லது  சாதாரணபெண்ணோ, அந்த  நொடியில்  அவனுக்கு  அது எதுவுமே தோன்றவில்லை … அங்கே , அந்த  வேளையில் அவன்  இளவரசியை  சந்திப்பதை  எதிர்பார்த்திருக்கவும்  வாய்ப்பில்லை …. எத்தனையோ  போர்க்களங்களில், அவன்  எதிரிகளின்  கூரிய உலோக வாட்கள் சாதிக்க  முடியாததை, இப்பெண்ணின் கண்களாகிய வாள்கள் சாதித்து  விட்டனவே !!!  அவனை  அடியோடு  சாய்த்து  விட்டனவே !!! இதுதான்  இயற்கையின்  இணையில்லா வலிமையோ… இதுதான்  இன்ப  விபத்து  என்றால், எத்தனை  முறை  வேண்டுமானாலும்  இந்த  விபத்தில்  சிக்கிக்கொள்ளலாமே … என்று  எண்ணுகிறான்  நம்  நாயகன்.
 
ஆனால், அவள் இளவரசி என்று தெரிந்ததும், குந்தவைக்கு  வந்த  அதே  தயக்கம், இன்னும்  அதிகமாகவே  அவனுக்குள்  எழுந்து பாடாய்ப்படுத்துகிறது … தன் நிலை என்ன? அவள் நிலை என்ன? அரசர்கள்  எல்லாம்  அடிபணிந்து  சேவகம்  செய்யக்கூடிய  “அரசிளங்குமரி” எங்கே? அனாதையாய் பழங்குடியின் பெருமையை  மட்டும்  தாங்கியிருக்கும் தான் எங்கே? தனக்கென்று  ஒரு  நாடில்லை… ஏன்? சொந்தமாய் வீடு  கூட  இல்லை…  இது  பொருந்துமா? நடக்குமா? உலகம்  தான்  ஏற்குமா? என்று  அவனும்  பலவாறு  சிந்திக்கிறான் … ஒரு  பெண்ணின்  கண்களுக்கு  உள்ள  சக்தியை  எண்ணி எண்ணி வியக்கிறான்…. மனப்போராட்டங்களில் தன்  அமைதியை இழக்கிறான் …  ஆனாலும் அதில் ஒரு சுகம் இருப்பதை உணர்ந்து அதில் திளைக்கிறான் …
                                  
காதல் என்ற ஒன்றை இதுவரையில் அவன் கேள்விப்பட்டுதானிருந்தான்… ஆனால்  அதை இப்போதுதான் அனுபவிக்க ஆரம்பித்திருக்கிறான் … ஒவ்வொரு முறையும் அவள் பொன்முகத்தில் தோன்றும் பலவகை பாவங்களில், அவள் தன்னை சிறிதளவேனும் விரும்புகிறாளா?  இல்லையா? என்ற கேள்விக்கான  விடையை தேட முயல்கிறான் .. ஆனால் அவள் கண்களை பார்த்தபின், தான் எங்கு இருக்கிறோம், என்ன  செய்கிறோம்,  என்ன எதிர்பார்த்து அவள் முன்பு இந்த நிமிடம் நிற்கிறோம் என்பதெல்லாம் அவனுக்கு எங்கே ஞாபகம் இருக்கின்றன? அவன்தான் தன்னையே அவளிடம் தொலைத்து விட்டானே…
 
அவள் தன்னை விரும்புகிறாள் என்பதை அவன் அறிவான் .. அவளும்  தான் அவளை நேசிப்பதை  அறிவாள்… எனவே, பெரிதாக பேசிக்கொள்ள ஒன்றும் இல்லை … ராஜாங்க  விஷயங்கள், பாண்டிய நாட்டாரின் சதிச்செயல்கள், பழுவூர்  இளையராணியின் பழிவாங்கும் படலம் இவற்றுக்கு நடுவே, காதல் கவிதைகள் புனைந்து மகிழ இருவருக்குமே நேரம் இல்லைதான்…. அதற்கான  சமய  சந்தர்ப்பங்களும் அமையவில்லைதான் ….
 
காவலர்களிடம் இருந்து  தப்பி வந்து அவசர அவசரமாக ஓலை கொடுக்க வேண்டும், திரும்ப உடனே புறப்பட்டு இலங்கை செல்லவேண்டும், பின்  திருடன் போல் பதுங்கிப்பதுங்கி மாறுவேடம் பூண்டு அவளை மீண்டும் வந்து சந்திக்க வேண்டும் .. அடடா .. எத்தனை இம்சைகள் .. இதற்கு நடுவே காதல் கீதம் பாட எப்படி மனமிருக்கும்? 
 
இத்தகைய நெருக்கடிகளிலும் அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட  நம்பிக்கையும், அன்பும் வலுவடைந்ததே தவிர நலிவடையவில்லை … சேர்ந்து இருக்கும் சமயங்களில், அவர்கள்  தங்கள்  காதலைப்பற்றி பேசியதைவிட, சோழ நாட்டைப்பற்றி கவலைப்பபட்டதுதான் அதிகம்…. ஆனாலும் அவர்கள் இருவரும் தங்கள் காதலின் மேன்மையை அறிவார்கள்… அதை வர்ணனைகள், வார்த்தைகள் எனும் மொழியின் சிறைகளுக்குள் அடைத்து வைத்து ரசிக்க இருவருமே விரும்பவில்லை !!! …
 
நாம் கூடத்தான் … சரி தானே?
கருத்துக்களை பகிர்ந்துக் கொண்ட நண்பர் ராகவன் சாம்பத் குமார் அவர்களுக்கு நன்றி. உங்கள் கருத்தையும் பின்னூட்டத்தில் சொல்லிட்டு போங்க…
தொடரும்…..

Read Full Post »

நூல் நயம்: கடல் புறா

                                    

                                                          (முகப்பு அட்டை)

தலைப்பு: கடல் புறா

ஆசிரியர்: சாண்டில்யன்

நயம்: சரித்திர நாவல்

பதிப்பகம்: வானதி

 

ஆசிரியர் சாண்டில்யனால் எழுதப்பெற்ற கடல் புறாவை படித்தேன். இந்நூல் விமர்சனம் எழுதும் அளவிற்கு எனக்கு தகுதி இல்லை. படிக்கும் போது ஏற்பட்ட இன்பத்தாக்கத்தை எனது கண்ணோட்டத்தில் எழுதிவிடுகிறேன்.

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படித்ததால் ஏற்பட்ட தாக்கம் தொடர்ந்து சரித்திர நாவல்களை படிக்கத் தூண்டிற்று. சரித்திர நாவல்களை சேமித்துக் கொண்டும் வருகிறேன்.

தமிழர்களால் கண்டரியப்பட்ட கடாரத்தின் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் எனக்குள் அதிகமாய் இருந்தது. ஆனால் தற்சமயம்கெடாஎன அழைக்கப்படும் கடாரத்தின் வரலாற்றுக் குறிப்புகள் மிகவும் சொற்பமாகவே உள்ளன. மலாய்காரர்களின் ஆதிக்கத்திற்குப் பிறகு நடந்த வரலாற்றுக் குறிப்புகளே அதிகம் காணப்படுகின்றன.

இப்புத்தகத்தை வாங்குவதற்கே போதும் போதும் என்றாகிவிட்டது. ஆரம்பத்தில் தேடிய இடங்களில் 140 ரிங்கிட்டிற்கும் குறையாமல் சொன்னார்கள்.  அப்படி இப்படியென்று கோலாலம்பூரில் சற்று குறைந்த விலைக்குக் கிடைத்தது. தடித்த அட்டை கொண்ட மூன்று பாகங்கள். புத்தகத்தின் வாசனையே தனிதான்.

ஆடி 18-ம் நாளில் பொன்னியின் செல்வன் தொடங்குவது போல், கடல் புறா ஒரு சித்திரா பௌர்ணமியன்று தொடங்குகிறது. கதையின் நாயகன் கருணாகர தொண்டைமான். அவருக்கு காஞ்சனா தேவி மற்றும் மஞ்சளழகியென இரு காதலிகள்.

ஜெயவர்மனின் ஸ்ரீவிஜய கொடுங்கோலாட்சிக்கு எதிராக, அவரின் சகோதரர் குணவர்மர் (காஞ்சனா தேவியின் அப்பா), சோழரின் உதவியை நாடுகிறார். தன் மகளுடன் கலிங்கத்தின் பாலூர்ப் பெருந்துறையில் இறங்குகிறார் குணவர்மர். ஸ்ரீவிஜயத்திற்கும் கலிங்கத்திற்கும் ஏற்கனவே நட்புறவு இருக்கிறது. இதன் வழி ஜெயவர்மன் கலிங்கத்தின் உதவியோடு குணவர்மனை தீர்த்துக்கட்ட திட்டம் போடுகிறான்.

இச்செய்தி சோழப் பேரரசுக்குத் தெரிந்துவிடுகிறது. குணவர்மனையும் அவர் மகள் காஞ்சனா தேவியையும் காத்து அழைத்து வர வீரராஜேந்திர சோழ தேவர் கருணாகர பல்லவனை கலிங்கத்திற்கு அனுப்புகிறார். அத்துடன் சமாதான ஓலை ஒன்றையும் கொடுத்து தென் கலிங்க மன்னன் பீமனிடம் சேர்ப்பிக்க உத்தரவிடுகிறார்.  பாலூர்ப் பெருந்துறை சுவர்ண பூமியின் திரவுகோலாக திகழ்கிறது.

இதன் மமதையில் தன்னை சுற்றியுள்ள நாடுகளின் கடல் ஆதிக்கத்தை ஒடுக்க நினைக்கிறான் கலிங்கத்து மன்னன். முக்கியமாக கடலோடிகளாக சிறந்து விளங்கிய தமிழர்களின் ஆதிகத்தை. கலிங்கத்தில் வசிக்கும் தமிழர்களையும் தமிழ் வணிகர்களையும் சிறையில் அடைத்து சித்திரவதை செய்கிறான்.

 கருணாகர பல்லவன் கொண்டு வரும் ஓலையை சற்றும் மதிக்காமல் தூக்கியெரிகிறான். பல்லவனையும் அவனை சார்ந்தவர்களையும் சிறை செய்து மரண தண்டனை வழங்குகிறான். அபாயத்தில் இருந்து தப்பி செல்கிறார்கள்.

கலிங்கம் மற்றும் ஸ்ரீவிஜயத்தின் கொட்டத்தை அடக்க தீர்மானம் எடுக்கிறான் கருணாகர பல்லவன். முதலில் கலிங்கத்தின் கடல் ஆதிக்கத்தை உடைக்கிறான். பிறகு குணவர்மனை ஸ்ரீவிஜய பேரரசின் அரியனையில் ஏற்றுகிறான். இம்முயற்ச்சிக்கு துணையாக உருவாவதே கடல் புறா எனும் கப்பல்.

பொன்னியின் செல்வனைப் போல் கதை சுற்றி வலைத்துக் கொண்டுச் செல்லப்படவில்லை. கதாபத்திரங்களும் குறைவாக இருப்பதால் கதை சரலமாகப் போகிறது. இரண்டாம் பாகத்தில் அளவு கடந்த சிருங்கார ரசமும் வர்ணனைகளும் சற்று எரிச்சலூட்டுகிறது. பாதிக்கு மேல் கதை சூடுபிடித்து ஆர்வமூட்டுகிறது.

 இக்கதையில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள்:

கருணாகர பல்லவன்: சோழர் படைத் தலைவன். இளைய பல்லவன் என அழைக்கப்படுகிறான். தந்திரசாளியும் புத்திசாளியும் கூட. ஸ்ரீவிஜய வெற்றிக்குப் பிறகு வீர ராஜேந்திர சோழ தேவர், கருணாகரனை வண்டை மாநில சிற்றரசானாக்கி காஞ்சனா தேவியையும் மஞ்சளழகியையும் மணம் முடித்து வைக்கிறார். (ஒரே கல்லில் மூன்று மாங்காய்). வண்டை மாநில அரசானான பிறகு தொண்டைமான் என அழைக்கப்படுகிறான்.

காஞ்சனா தேவி: கட்டழகி காஞ்சனா கடாரத்தின் இளவரசி. இவளின் துணிச்சல் கருணாகரனுக்கு இவள் மீது காதல் கொள்ளச் செய்கிறது.

மஞ்சலழகி: ஸ்ரீவிஜய பேரரசின் இளவரசி. ஆக்ஷய முனையின் தலைவி.

அநாபய சோழர்: பிற்காலத்தில் குழோதுங்கன் என பெயர் பெற்று விளங்குகிறார். கருணாகரனின் நண்பன்.

அகூதா: சீனக் கடல் கொள்ளைக்காரன். கருணாகரன் மற்றும் அமீர் என பலருக்கு பயிற்சியளிக்கிறார். பிற்காலத்தில் சீன தேசத்து அரசனாக திகந்தவர்.

அமீர்: இரக்க மனம் கொண்ட அரபு நாட்டு முரடன். கருணாகரனின் உப தலைவனாக பணியாற்றுகிறான்.

கண்டியதேவன்: கருணாகரனின் உபதலைவன். கப்பல் விடுவதில் திறமைசாளி.

அமுதன்: வணிகன். செல்வத்தை பாதுகாப்பதில் சிறந்தவன்.

 அகூதாவின் கதாபாத்திரம் ஆர்வமூட்டும் வகையில் இருக்கிறது. இரண்டாம் பகுதிக்கு மேல் அவரை பற்றிய தகவல்கள் எதுவும் இல்லாமல் போகிறது. அக்ஷய முனையின் தலைவனாக இருக்கும் பலவர்மனின் கதியும் அப்படியே. கல்கியை போல், இக்கதையின் ஆசிரியர் அவர்களின் சில தகவல்களை கொடுத்து கதையை முடித்திருக்கலாம்.

கதையின் கடற்போர் தந்திரங்களும், திருப்புமுனைக்களும் சுவை கூட்டியுள்ளன. கதையை படிப்பதற்குத் திகட்டாமல் இருக்கச் செய்கிறது. பெண்களை வர்ணனை செய்வதில் சாண்டில்யனை அடித்துக் கொள்ள முடியாது போலும்.

ஸ்ரீவிஜய வெற்றியோடு கதை நிறைவை அடைகிறது. அதற்கடுதாற்போல் கலிங்கத்தின் படையெடுப்பு போன்றவை வேறு நாவல்களில் உள்ளனவா என தெரியவில்லை. இருந்தால் தெரிவிக்கவும். தரை போர் முறைகளைதான் அதிக அளவிலான சரித்திர நாவல்களின் கண்டிருப்போம். சரித்திர நாவல் பிரியர்களுக்கு கடல் புறா கண்டிப்பாக ஒரு வித்தியாசமான விருந்தாக அமையும்.

 

 

 

 

 

 

Read Full Post »

எனது பார்வையில்: நேபாளி

    

படம் ஆஹா.. ஓஹோ.. என சொல்வதற்கில்லை. என்னவோ தெரியவில்லை, இது போன்ற படங்களை பார்க்கும் போது இந்தியன் தாத்தா தான் கண் முன் நிற்கிறார். இதற்காகவே இயக்குனர் சங்கருக்கு ஒரு ‘ஓ’ போட வேண்டும். என்ன நான் சொல்றது?? கூடவே கமலுக்கும் ஒரு ‘ஓ’ போடனும்.ராம சரவணன் தயாரிப்பில், துரை இயக்கத்தில் உறுவாகியிருக்கும் படம் நேபாளி. இசையமைபாளர் ஸ்ரீகாந் தேவா. படத்தின் மையக் கருத்து பழிவாங்கும் படலம்.

இருக்கமான, பரபரப்பு மிக்க சூழ்நிலையில் கதை ஆரம்பமாகிறது. மர்மமான பின்னனியிசை நம்மை கதையோடு ஒன்றிபோகச் செய்கிறது. மூன்று வெவ்வேறு இடங்களில் கதை ஆரம்பமாகிறது. மூன்று கதைகளின் நாயகர்களுக்கும் என்ன தொடர்பு என கேள்வி எழுகிறது. நேபாள இளைஞனாக கொலை செய்துவரும் பரத், சிறைக் கைதியாக தற்கொலைக்கு முயற்சி செய்யும் பரத் மற்றும் இளமை துள்ளளுடன் பிரியாவுடன் (மீரா ஜாஸ்மின்) காதல் ஆட்டம் போடும் கார்த்திக் (பரத்). இன்னும் எத்தனை படங்களுக்குதான் நாயகிகளின் பெயரை பிரியா என்று வைத்து சாகடிக்க போகிறார்களோ தெரியவில்லை.

மூன்று கதைகளும் ஒன்றன் பின் ஒன்றாக மாறி மாறி வருகிறது. ‘ஆயுத எழுத்து’ படத்தை காப்பி அடித்தது போல் உள்ளது என சொல்ல மாட்டேன். இறுதியில் மூன்று கதைகளின் நாயகனும் ஒருவன்தான் என தெரியும் போது, ‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்’ எனும் வசனம் நம் நினைவில் மின்னலடிக்கிறது.

 

       

எங்கெல்லாம் பாலியல் கொடுமை நடக்கிறதோ, அங்கெல்லாம் பரத் வந்துவிடுகிறார். அவரிடம் சொல்லிவிட்டுதான் செய்வார்கள் போல் இருக்கிறது. அதைவிடக் கொடுமை, சிறைச் சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பரத் தப்பி வந்து சிறை அதிகாரியை கொலை செய்கிறார். எப்படி என்று ஆராயக் கூடாது.

நேபாள இளைஞனாக வரும் பரத்தின் வேடம் சற்று பொருத்தமின்றி காண்கிறது. முதல் மூன்று கொலைகளை விதவிதமாக செய்கிறார். அதற்கு விளக்கமும் கொடுக்கிறார். எப்படிக் கற்றுக் கொண்டார் என தெரியவில்லை. பணிபுரியும் இடத்திற்கு வரும் நேபாள தம்பதியினருடன் நேபாள மொழியும் பேசுகிறார். என்ன கொடுமை சார் இது.

அப்படி இப்படி என்று கடைசியில் போலிஸ்காரர்கள் பரத்தை போட்டு தள்ளிவிடுகிறார்கள். பாலியல் கொடுமை செய்பவர்களின் பெயர் பட்டியளை பரத் தனது ‘data base’ல் வைத்திருப்பார் போலும். அவற்றை கொண்டு போலிஸ்காரர்கள் அதிகாரபூர்வ நடவடிக்கை எடுக்க போவதாக கூறி படம் முடிகிறது. படத்தின் பாடல்கள் சுமார் ரகம், நினைவில் நிற்கும்படி இல்லை.

மொத்தத்தில் இந்தியன், ஆயுத எழுத்து, மன்மதன், கஜினி என குழைத்து அடித்த கலவை இந்த நேபாளி. படம் பார்க்கும் போது அனுபவிக்கனும் ஆராயக் கூடாது என மனதை தெற்றிக் கொண்டு பார்த்தால் படத்திற்கு ‘ஓகே’ சொல்ல்லாம்.

 

 

Read Full Post »

பதிவு எழுத ‘ஐடியா’ எதுவும் கிடைக்கவில்லை.

மின்னஞ்சலில்  கண்களுக்கு இதமான சில படங்களை கண்டேன்… இதோ உங்களுக்காக….

 

Read Full Post »

Older Posts »