Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘சிறுகதை’ Category

விடியல் (சிறுகதை)

“டேய் ராஜபாகு உங்க ஆத்தா அங்க தூக்கு மாட்டிகிடுச்சுடா, ஆட்டம் போட்டுகிட்டு இருக்க கிறுக்கு பயலே”, என்று வாயில் இருந்த வெற்றிலை எச்சில் தெரிக்க கத்தினாள் காத்தம்மாள் கிழவி. ஐயோ என்ன இது! கிழவியின் வார்த்தைகள் ஆயிரம் சம்மட்டிகளை சேர்த்து வைத்து என் இதயத்தில் அடித்ததை போல் இருந்தது. காத்தம்மாள் கிழவி என் கிராமத்தின் ‘செய்தியாளர்’. தகவல் கிடைத்திருக்காமல் இப்படி சொல்லியிருக்க மாட்டாள்.
                என் கிராமத்தில் புதன் கிழமை மாலை வேளைகளில் ரொட்டிக்காரர் வருவது வழக்கம். அவரது மோட்டார் சைக்கிளின் ‘ஹார்ன்’ சத்தத்தை கெட்டவுன் என் நாவில் எச்சில் ஊறத் தொடங்கிவிடும். எனக்கு அப்பொழுது ஏழுவயதுதான் இருக்கும். கிராமத்து பகுதியில் உள்ள தமிழ் பள்ளியில் ஆரம்பக் கல்வியை தொடங்கிய காலகட்டம்.
அன்று ஐந்து மணி வாக்கில் ரொட்டிக்காரரின் மோட்டார் சைக்கிளின் ‘ஹார்ன்’ சத்தம் கேட்டது. என் கால்கள் ஓர் இடமாக நிற்காமல் அலைமோதிக் கொண்டிருந்தது. வாரத்திற்கு ஒரு ரொட்டியாவது வாங்கி என் நா சுவை பார்க்காவிட்டால் என் மனம் வாடி வதங்கிவிடும். என் தேவையை அறிந்த அம்மா ஐம்பது காசை என் கையில் கொடுத்தார். போய் ரொட்டி வாங்கி சாப்பிடுடா கண்ணா என்று என் தலையை வருடி அனுப்பி வைத்தார். எனக்குப் பிடித்த பால் ரொட்டியை வாங்கிக் கொண்டு கோவிலுக்கு அருகில் இருந்த குட்டிச் சுவரில் அமர்ந்துக் கொண்டேன். முதல் கடியை வைப்பதற்குள் காத்தம்மாள் கிழவியின் அதிரடி கூச்சல் சத்தம் என்னைச் சிதறடித்தது.
                 கடவுளே! ஏன் இந்த சோதனை? நான் வெளியே வந்து இன்னும் பதினைந்து நிமிடங்கள் கூட ஆகவில்லையே. அதற்குள் ஏன் அம்மா இப்படி செய்துவிட்டார்? எனக்கு ஆதரவாக இருந்தது அம்மா மட்டும்தானே? இனி யார் என்னை பார்த்துக் கொள்வார்கள்? நொடிப் பொழுதில் ஆயிரம் கேள்வி அம்புகள் என்னை துளைத்தெடுத்துக் கொண்டிருந்தன. சட்டென சுவரில் எட்டிப் பாய்ந்தேன். என் கையில் இருந்த ரொட்டித் துண்டு முண்டியடித்துக் கொண்டு மண்னை கவ்வியது. வீட்டிற்கு விரைந்து ஓடினேன்.
                 கட்டிலில் அம்மாவின் பிரேதத்தை கிடத்தி வைத்திருந்தார்கள். கண்களை திறந்த வண்ணம், சற்று வெளியே தள்ளிய நாக்குடன் அசைவற்ற ஜடமாய் விரைத்து போய் கிடந்தார். என் கண்ணீர் வற்றும் வரை அழுது தீர்த்தேன். மறுநாள் தொடங்கி, கருமாதியென அனைத்து சடங்குகளும் நடந்தாகிவிட்டது. என் அப்பாவோ வீட்டு பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை. இனி என்னை வந்து அழைத்துச் செல்வார் என எதிர்பார்த்துக் காத்திருந்தால் அது என் முட்டாள் தனம்தான்.
                 என் குடும்பம் நடுதர வர்கத்தைச் சேர்ந்தது. என் அப்பா வெளியூரில் தங்கி வேலை செய்துக் கொண்டிருந்தார். அவ்வப்பொழுது பணம் அனுப்பி வைப்பார். இரண்டு அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வந்துச் செல்வார். தந்தையின் பாசம் கிடைக்காதவனாய் தான் வளர்ந்தேன். இந்த சூழலில் என் அம்மா யாரின் உதவியையும் எதிர் பார்க்கவில்லை. வீட்டில் இருக்கும் நேரம் போக சிறு தையல் வேலைகளை செய்து குடும்பச் செலவுகளை பார்த்துக் கொள்வார்.
                  அம்மா இறப்பதற்கு ஓரிறு தினங்களுக்கு முன் அப்பா வீட்டிற்கு வந்தார். இருவருக்கிடையே ஏற்பட்ட சண்டையில் என் அம்மாவை அடித்து துன்புறுத்தினார் அப்பா. அவர்களின் பேச்சு எனக்கு புரியாத புதிராகவே இருந்தது. பயந்து போனவனாய், காரணம் அறிய பக்குவ படாதவனாய், தடுக்க பலமில்லாதவனாய் ஓர் ஓரமாய் நின்று அழுதுக் கொண்டிருந்தேன். அப்பா தன் துணிமணிகளை எடுத்துக் கொண்டு அன்று இரவே எங்கோ கிளம்பிவிட்டார்.
                அதுவே நான் அவரைப் பார்த்த இறுதி நாள். வேரோரு பெண்ணுடன் புதிய உறவை ஏற்படுத்திக் கொண்டதால் தான் இவ்வளவு பிரச்சனைகள் என பின் நாட்களில் அறிந்துக் கொண்டேன். இதற்கெல்லாம் முடிவாக நான் அனாதையென நடுத்தெருவில் விடப்பட்டேன்.
                 வீட்டில் காரியம் முடிந்து அனைவரும் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். “பையனை நாங்க அழைச்சிகிட்டு போய் பாத்துக்குறோங்க”, என்றார் என் தாய் மாமன். தன் குடும்பத்தோடு ஆலோசித்து தான் இந்த முடிவை எடுத்தாரா என்பது இன்றளவில் பதில் கிடைக்காத கேள்விதான். இல்லை இவ்வளவு சொந்தங்கள் இருந்தும் என்னை கவனிக்காமல் விட்டால் நாலுபேர் பேசும்படி ஆகிவிடுமோ என்பதற்காக இவ்வாறு கூறினாரோ? அவரது இனிப்பான வார்த்தைகளில் ஊரார் மெச்சுதளோடு என்னை அழைத்துச் சென்றார்கள்.
               வாரங்கள் பல கடந்தது. அவர்களும் என்னை பள்ளிக்கு அனுப்புவதாக தெரியவில்லை. வீட்டிலும் என்னை ஒரு பாரமாகவே கருதினர். யாரும் முகம் கொடுத்து பேச மாட்டார்கள். மொத்தத்தில் உயிருள்ள ஒரு பொருளாய் நடமாடிக் கொண்டிருந்தேன். என் அம்மாவை சம்பந்தப்படுத்தி குத்திப் பேசும் பேச்சுகளும் ஏச்சுகளும் எனக்கு மருத்துப் போய்விட்டது.
                  “உங்க அம்மா என் கிட்ட கொடுத்து வெச்சிட்டு போயிருக்காளா? இல்ல உங்க அப்பன் தான் மாச மாசம் கொட்டிக் குடுக்குறானா? இப்ப படிப்பு ஒன்னுதான் உனக்கு கேடு”, நான் பள்ளிக் கூடம் போகட்டுமா எனக் கேட்டதற்கு அர்ச்சனை செய்தாள் அத்தை. என் பள்ளிக்கூட கனவுகளுக்கு மூட்டை கட்டி வைத்துவிட்டு அவர்கள் கொடுக்கும் சிறு சிறு வேலைகளை செய்துக் கொண்டு வீட்டிலேயே இருக்க ஆரம்பித்தேன்.
               சில சமயங்களில் அம்மா மீது சிறு கோபங்கள் தோன்றி மறையும். அம்மா மட்டும் இருந்திருந்தால் நான் இவ்வளவு கஷ்டப்பட தேவையில்லை. நிம்மதியாக பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டுருந்திருப்பேன் என நினைத்து பல நாட்கள் அழுதிருக்கிறேன். நான் அறியாமல் சிறு தவறுகள் செய்தாலும் அதை பெரிதாக்கி அடிவாங்கச் செய்வாள் அத்தை. ஒரு முறை நான் வீட்டை சுத்தமாக துடைக்கவில்லை என பிரச்சனை எழுப்பினாள். “வேளாவேலைக்கு நல்லா தின்னுரதானே, இந்த வேலைய கூட உன்னால ஒழுங்கா செய்ய முடியாதா”, என என் வலது கையில் கம்பியை காய்த்து சூடு வைத்தாள்.
சிறு பிள்ளைகளை சித்திரவாதை செய்தால் காவல் துறையினரிடம் புகார் செய்ய வேண்டுமென என் ஆசிரியர் சொல்லிக் கொடுத்திருக்கிறார். ஆனால் அந்த வயதில் அதையெல்லாம் எப்படி செய்வதென்று எனக்கு தெரியவில்லை. சூடுபட்ட காயத்தால் துடிதுடித்துப் போனேன். அன்றிரவே வீட்டை விட்டு தப்பி ஓடினேன். சாலையோரமாக நின்றுக் கொண்டிருந்த லாரியில் ஏரி அமைதியாக படுத்துக் கொண்டேன்.
                   நீண்ட பயணத்திற்கு பிறகு லாரி ஓர் இடத்தில் நின்றது. சட்டென பாய்ந்து அங்கிருந்து நகர்ந்தேன். என் பெற்றோரின் சுயநலம் பிள்ளையை எப்படியெல்லாம் பாதிப்படைய செய்கிறது. ஊர் பேர் தெரியாத இடம். ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் மக்களின் நகர வாழ்க்கை. என்ன செய்வதென்று அறியாமல் நாதியற்று கிடக்கும் நான்.
“அண்ணே, நீங்க என்ன வேலை கொடுத்தாலும் செய்யுறேன், கொஞ்சம் சாப்பாடு மட்டும் கொடுங்க’, என்றேன் ஒரு ஒட்டுக் கடை ஓரமாக நின்றவாரு. என்னை ஏற இரங்கப் பார்த்தக் கடைகாரர் “சாப்பாடுலாம் ஒன்னும் கிடையாது கிளம்பு”, என விரட்டினார். பசி மயக்கத்தில் உடல் சோர்ந்து போனேன். வெய்யிலின் தாக்கம் என்னை வருத்து எடுத்துக் கொண்டிருந்தது. நான் இரண்டு அடி நகர்ந்திருப்பேன் அந்தக் கடைக்காரர் என்னை அழைத்தார். உணவளித்தார்.
                திருப்தியாக உண்டேன். என் கதை முழுவதும் கூறி அழுது தீர்த்தேன். அந்த கடைக்காரர் பெயர் முருகேசு. நல்ல மனிதர். எனக்கு சிறந்த ஆலோசகராக விளங்கியவர். “இதோ பாரு தம்பி, சின்ன பசங்களை வேலைக்கு வைச்சிக்கிறது சட்ட படி குற்றம். பக்கத்தில இருக்கும் அன்பு இல்லத்தில் சேர்த்து விடுறேன், பள்ளிக்கூடத்திற்கு போய் ஒழுங்கா படிக்கனும் புரியுதா”, என்றார். அவரது ஆதரவான வார்த்தைகள் என் வாழ்வில் ஓளி ஏற்றி வைத்ததை போல் சந்தோசமாக இருந்தது. சந்தேகத்தால் தான் ஆரம்பத்தில் விரட்டினார் என பிறகு புரிந்துக் கொண்டேன்.
                   அன்பு இல்லத்தில் இருந்துக் கொண்டு படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். முருகேசு அண்ணன் நேரம் கிடைக்கும் சமயங்களில் என்னை கண்டு செல்வார். நானும் பள்ளி விடுமுறைகளில் அவரது கடைக்குச் சென்று சிறு சிறு உதவிகள் செய்துவருவேன். பல சிரமங்களுக்குப் பின் படிப்பை தொடர்ந்தது, படிப்பின் ‘சுவையை’ எனக்கு உணர்த்தியது. பாடங்களை ‘ருசித்து’ படிக்க ஆரம்பித்தேன்.
என் அம்மாவின் ஞாபகம் ஒரு கனமும் என்னை விட்டு பிறிந்ததில்லை. நாளுக்கு நாள் அம்மா மீதிருந்த ஏக்கத்தைவிட கோபமே அதிகரித்தது. எத்தனையோ மாதர்கள் கணவனை பிரிந்த பின்னர் தங்கள் பிள்ளைகளை சிறப்பாக வளர்க்கிறார்கள். ஏன் என் அம்மா மட்டும் என்னை நாதியற்று நடுத்தெருவில் நிற்கும்படி செய்தார்?
****************************
‘டாக்டர் அந்த ‘பேசன்ட்’ சுயநினைவிற்கு திரும்பிட்டாங்க”, என்றாள் என் அறைக் கதவை தட்டிக் கொண்டு உள்ளே வந்த தாதி. என்னை சுதாகரித்துக் கொண்டு பழைய நினைவிலிருந்து திரும்பினேன்.
நான்கு ஐந்து நாட்களுக்கு முன் விஷத்தை குடித்து உயிருக்கு போராடிய மாதுவை நான் பணி புரியும் மருத்துவமனையில் சேர்த்தார்கள். நான் மருத்துவனாக வேலை செய்யத் தொடங்கியதிலிருந்து இதுபோல தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பல நோயாளிகளை சந்தித்திருக்கிறேன். ஆனால் இவள் விசயத்தில், கூடவே அழுது கொண்டிருந்த அவளது பிள்ளைகளை பார்க்கையில் என் மனம் நெருடியது. இவளை காப்பாற்ற முடியவில்லையெனில் இந்தப் பிள்ளைக்ளின் கதி என்னவாகும்?
                    சுயநினைவிற்கு திரும்பிய அவளை காண சென்றேன். தன் பிள்ளைகளை கட்டியனைத்து அழுதவாறு படுத்திருந்தாள். என்னைக் கண்டவுடன் கண்களை துடைத்துக் கொண்டு தன்னை சரிபடுத்திக் கொண்டாள். அவள் அருகினில் அமர்ந்து மருந்தோடு மருந்தாக சில புத்திமதிகளை கூற விளைந்தேன். தன்னை விட்டுச் சென்ற கணவனின் செயலால் இந்த தற்கொலை முயற்சியென அறிந்துக் கொண்டேன். இனி பிள்ளைகளுக்காக வாழ்வை தொடர்வாள் என விழியோரம் பொங்கிய அவளது கண்ணீர் சொல்லியது. அந்த சிறு பிள்ளைகளின் வாழ்வில் விடியலை ஏற்படுத்திய மனத்திருப்தி எனக்கு மகிழ்ச்சியளித்தது.
அதிர்வு விசையில் இருந்த என் கையடக்கத் தொலைபேசி அலறியது. அடுத்த முனையில் என் மனைவி பேசிவிட்டு வைத்தாள் இன்று முருகேசு அண்ணனின் நினைவு நாள். ஆறு ஆண்டுகளுக்கு முன் முதுமையின் காரணமாக அவர் காலமாகிவிட்டார். இப்பொழுது எனக்கு ஐம்பத்து நான்கு வயதாகின்றது. சுடர் விளக்காயினும் தூண்டுகோள் தேவை என்பார்கள். என் வாழ்வில் தூண்டுகோளாக இருந்தவர் முருகேசு.
                    என் தாய் போன்றவரின் கோழைத் தன செயல்களால் எவ்வளவு பிள்ளைகள் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அவர்களில் பலர் சமுதாயத்திற்கும் நாட்டிக்கும் கேடு விளைவிற்பவர்களாகவும் உறுவாகி இருக்கலாம். நான் இன்று மருத்துவனாக உருவாகியிருப்பதற்கு காரணம் முருகேசு அண்ணனை போன்றேரின் நல் உள்ளங்களால்தான். அவருக்கு நினைவஞ்சலி செலுத்த வேண்டுமென கூறி என் மனைவி தொலைபேசி அழைப்பு கொடுத்தாள். வீட்டை அடைந்தவுடன் முருகேசு அண்ணனின் பெயரில் அர்ச்சனை செய்துவரலாம் என என் மனைவி கூறினாள். சரியென சொல்லி துவாளையை இடுப்பில் முடிந்துக் கொண்டு குளியலறையை நோக்கிச் சென்றேன்.
-முற்றும்-

எண்ணம், எழுத்து;
விக்னேஸ்வரன் அடைக்கலம்

Read Full Post »

திருடியது யார்? – சிறுகதை

 “என்ன மகேன் போன காரியம் நல்லபடியா முடிஞ்சதா, கவலை படாதடா உன் மனசை போலவே எல்லாமே நல்ல படியா நடக்கும்”, என்றான் குமார். குமாரின் வார்த்தைகள் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியது போல இருந்தது மகேனுக்கு. குமார் மற்றும் மகேன் இருவரும் பாலிய சினேகிதர்கள். குமார் சுய தொழில் செய்து வருபவன், தன் தந்தை இறந்த பிறகு முழு வியாபாரப் பொறுப்பும் அவன் பார்த்து வருகிரான். மகேன் தன் பள்ளி படிப்பு முடிந்த பிறகு ஒரு தனியார் நிறுவணத்தில் பணி புறிந்து வருகிறான். மகேனின் முகத்தில் ஆரம்பத்தில் இருந்த அதே கவலை, ” என்னடா கப்பல் கவுந்த மாதிரி இனமும் சோகமா இருக்க, அதன் எல்லாம் சரியாயிடுச்சே, பின்ன என்ன கவலை”, என்று மகேனை பார்த்தான் குமார். “இல்லடா குமார் நீ கொடுத்த கார்டுல பணம் எடுக்க முடியலடா, பாக்கி பணம் ரொம்ப குறைவா இருக்கு”, என்றான் மகேன். தன் நண்பனின் பதில் குமாரின் காதுகளில் இடி போல் விழுந்தது.  

      சமீபத்தில் மகேனுக்கு சிறு பண பிரச்சனை எற்பட்டது. கடந்த வருடம் தான் சேமித்து வைத்திருந்த தொகையை முன் பணமாக செலுத்தி அருகில் இருந்த குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டை வாங்கி சந்தோஷமாக தன் குடும்பத்தாருடன் குடி புகுந்தான். வாடகை வீட்டுக்கு பணத்தைக் கொடுப்பதை விட, வங்கியில் சொந்த வீட்டுக்கு மாதத் தவனைச் செலுத்துவது அவனுக்கு ஒரு வித திருப்தியே அளித்தது. சிறு பிராயத்தில் தந்தையை இழந்த மகேனுக்கு இடைநிலை கல்வியை தொடரும் தம்பியும், மூட்டு வலியால் பாதிக்க பட்ட தாயாரும் உள்ளனர். இரு மாதங்களுக்கு முன்பு தனதுத் தாயாரின் உடல் நிலை பாதிக்க படவே, அவனுக்கு அதிகமான மருத்துவ செலவுகள் எற்பட்டது மட்டுமல்லாமல் வீட்டுத் தவனையும் சரிவர செலுத்த முடியாமல் கால தாமதம் ஆனது. வங்கியிலிருந்து மூன்றாம் நினைவுருத்தல் கடிதம் வந்ததும் தன் நண்பன் குமாரின் உதவியை நாடினான் மகேன்.

      குழப்பத்தில் இருந்த தன் நண்பனின் தோளில் கையை வைத்தான் மகேன், “டேய் என்னடா, என் மேல சந்தேகப்படுரியா? நான் பொய் சொல்லல, நிஜமா நான் பார்க்கும் போது பணமே இல்லைடா”, என சங்கடமாகக் கூறினான் மகேன். “சேய்! என்னடா இப்படி பேசற, உன் குணம் எனக்கு தெரியாதா, நான் அந்த பணத்தை எந்த காரியத்துக்கும் பயன்படுத்தல. அதான் ரொம்ப குழப்பமா இருக்கு, வா என்ன செய்யலாம்னு யோசிப்போம்”, என தன் வேலைகளை நிறுத்திவிட்டு வந்தான் குமார். தன் மடிக் கனிணியை திறந்து அவன் செய்த வரவு செலவுகளை சரி பார்த்தான், தான் அந்த வங்கியின் பணத்தை உபயோகிக்கவில்லையென தெள்ளத் தெளிவாக தெரிந்தது.

      இரு நண்பர்களும் தங்கள் குடியிருப்புப் பகுதிக்கு அருகில் இருந்த உணவகத்தில், இனம் புரியாத அழுத்தத்துடனும் குழப்பத்துடனும் அமர்ந்திருந்தார்கள். குமார் தனது ஊழியர்களை தொடர்பு கொண்டு, வியாபார வரவு செலவுகளை குறித்து வைத்து அந்த வங்கி கணக்குடன் ஒப்பிட்டு பார்த்து கொண்டிருந்தான். அவன் செலவு செய்யவில்லை என்பதையே ஊழியர்களும் குறிப்பிட்டார்கள். பலமுறை யோசித்து, மேழும் குழப்பம் அடைந்த அவன் தனது சட்டைப் பையில் இருந்த வெண்சுருட்டை பற்ற வைத்தான். “சரி இன்னும் ஒரு வழிதான் இருக்கு, வா ‘பேங்’ போய் என்ன பிரச்சனைனு கேட்டு தெரிஞ்சிக்கலாம்”, என்று தன் நண்பனை அழைத்துக் கொண்டு வங்கிக்கு சென்றான் குமார்.

      வங்கிகளில் நாம் செய்த பற்றுவரவிற்கான கணக்கு வழக்குகள் உடனுக்குடன் கனிணி செயல்பாட்டால் பதிவு செய்யப் பட்டிருக்கும். கடந்த நாட்களில் நாம் செய்த பற்றுவரவிற்கான கணக்கு வழக்குகளை வேண்டிய சமயத்தில் பதிவு எடுத்து வைத்துக் கொள்ள வசதிகள் செய்துத் தரப் பட்டுள்ளன.  “போன வாரம்தான் சார் எல்லா பணத்தையும் வெளியாக்கிருக்கிங்க” என கூறி பற்றுவரவு கணக்கு வழக்குகளை குமாரின் முன் வைத்தார் வங்கியின் குமாஸ்தா. தனது சேமிப்புப் பணம் அனைத்துமே தொடர்ந்து ஆயிரம் ஆயிரம் ரிங்கிட்டாக வெளியாக்கி முடிக்கப் பட்டிருந்ததை பார்த்த குமார் மேழும் பேரதிர்ச்சியடைந்தான்.

      வங்கி மேலதிகாரியிடம் நடந்தவற்றை விளக்கிக் கூறினான், தன் பணம் மீண்டும் கிடைக்காது என்ற பட்சத்தில், வங்கியின் நிர்வாகம் சரியில்லாததால்தான் தான் பணத்தை இழக்க நேர்ந்தது என கோபத்தில் தகராறு செய்தான். வங்கி நிர்வாகத்தினர் பணம் காணமற் போனதற்கும் வங்கிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதில் விடாப் பிடியாக இருந்தார்கள். கஷ்டப் பட்டு சம்பாதித்த பணம் பறிபோனதில் மனம்முடைந்தவன் தன் வங்கி கணக்கு வழக்குகளை ரத்து செய்து விட்டு கிளம்பினான். மாகேனுக்கோ தன்னால்தான் தன் நணபனுக்கு இவ்வளவு சிரமம் எற்பட்டது என் நினைத்து மன வருத்தம் ஏற்பட்டது.

      காவல் நிலையத்தில் முழு விவரமும் புகார் செய்யப் பட்டு இருவரும் வீடு திரும்பும் வழியில் பல சிந்தனைகள் குமாரின் மனத் திரையில் சிறகடித்தன. பாதுகாப்பாக வங்கியில் வைத்த பணம் எப்படி காணமற் போக முடியும். இந்த ஒரு கேள்விக்கே அவன் மனம் பதிலைத் தேடி அலைந்து திரிந்தது.  வேறு என்னதான் செய்ய முடியும், பாடு பட்ட பலன்கள் யாவும் பஞ்சாய் பறந்து போனால் யாரால்தான் தாங்கிக் கொள்ள முடியும். வங்கி ஊழியர்கள் யாராகினும் பணத்தை எடுத்து விட்டிருப்பார்களா? இப்படியாக மனம் எதையெதையோ எண்ணியது.

      “சாரிடா மகேன், என் பிரச்சனையில உன்ன மறந்துட்டேன், இந்த ‘செக்க’ வச்சி உன் கடனை அடைச்சிடு, பயபடத இது வேர பேங்க் அக்காவுட், கண்டிப்பா பிரச்சனை இருக்காது”, என்று சட்டைப் பையில் இருந்த காசோலையை நீட்டினான் குமார். “என்னடா நீ! நீயே கஷ்டத்துல, இருக்க எனக்கு வெற தண்ட செலவு தேவயா? பரவாலடா, நான் வேறு இடத்துல பணத்தை புரட்டிக்கிறேன்”, என்று நண்பனின் காசோலையை வாங்க மறுத்தான் மகேன். அவனை சமதான படுத்தி காசோலையை கொடுத்து விட்டு விடைபெற்று வீடு திரும்பினான் குமார்.

      புதிய நாள் கண்திறந்து பத்து நாழிகை கழிந்திருந்தது, ஈப்போ நகரம் வேலைப் பலுவால் கனத்து காணப்பட்டது. இவையனைத்தையும் சற்றும் பொருட்படுத்தாமல் ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்தது ஒரு உறுவம். நீண்ட நேரம் ஒலித்துக் கொண்டிருந்த கையடக்கத் தொலைபேசி உறங்கி கொண்டிருந்தவரின் உறக்கத்தை சற்றும் கலைக்கவில்லை. ஏழாவது முறையாக ஒலியெழும்பிய போது அவரது கைகள் போர்வையிலிருந்து எட்டிப் பார்த்து ஓசை எழுப்பிய கருவியை அலசியது. தொலைபேசி அழைப்பிற்கு பதிலழித்து முடித்தவர் சட்டென கிளம்பினார். அடுத்த அரை மணி நேரத்தில் தனது காரில் காற்றோடு காற்றாக மறைந்தார்.

      “வாங்க மிஸ்டர் மாதவன், உங்க விடுமுறை முடியறதுக்கு முன்னதாவே உங்கள வேலைக்கு வர சொன்னதிற்கு மன்னிக்கனும், முக்கியமான கேஸ் ஒன்ன சீக்கரமா முடிக்க உத்தரவு போட்டுடாங்க, அதான் உங்கள அழைக்க வேண்டியதா போச்சி”, என்றார் காவல் அதிகாரியான அமீர். “பரவாயில்லை சார்  நீண்ட நாள் விடுமுறை எனக்கும் போரடிச்சி போச்சி, நேத்து ‘நைட்டுதான்’ ஊர்லெருந்து வந்தேன், தூங்க ‘லேட்டாச்சி’ அதான் நீங்க போன் பன்னுனது தெரியாம அசந்து தூங்கிட்டேன், நீங்கதான் என்ன மன்னிக்கனும்”, என்றார் மாதவன். மாதவன் சிறப்புப் போலிஸ் பிரிவினில் பணிபுரியும், திறமையும், தைரியமும் மிக்க காவல் அதிகாரி. பல சிக்கலான புகார்களை நூதனமான யுக்திகளை கையாண்டு கண்டுபிடித்தவர். இதனல் காவல் இலாக்கவனிரிடம் அவருக்கெனெ தனி மதிப்பும் மரியாதையும் இருந்தது.

      “சரி மாதவன், இந்த ‘பைல்ஸ்’ எல்லாம் கடந்த மூனு மாதம இந்த வட்டாரத்தில் இருந்து நமக்கு வந்த ‘கேஸஸ்’,” என்று மாதவன் முன் சில புகார் பதிவுகளை எடுத்து வைத்தார் அமீர்.

“இங்க இருக்கறது எல்லாமே இந்த ஈப்போ நகரத்த சுற்றியுள்ள ‘பேங்’ சம்மந்தப் பட்ட புகார்கள். ‘பேங்’ல உள்ளவங்களுக்கோ, ‘டேப்பாசிட்டர்கோ’ இந்த பணம் எப்படி காணமல் போனதுனு தெரியல. சிக்கலான கேஸ்ஸாக இருக்கறதால தடயங்கள் கிடைக்கவும் சிரமமா இருக்கு. என் சந்தேகமெல்லாம் இது பலரால் செய்யப் பட்டிருக்கலாம் என்பதுதான். கூடிய சீக்கரத்தில் இதை நாம் கண்டிபிடிச்சி தடுக்கனும், இதனால் பலர் பாதிக்க பட்டிருக்காங்க” என சினிமாவில் வரும் போலிஸ் அதிகாரி போல எடுத்துரைத்தார் அமீர்.

“சரி சார் இந்த ‘கேஸ’ நான் எடுத்துக்கிறேன்”, என்று கர்வமற்ற தன்னம்பிக்கையுடன் கூறினார் மாதவன். “ஓகே மாதவன் இந்த ‘கேஸ்’ சம்மந்தமா எந்த உதவியா இருந்தாழும் என்னை நாடலாம்”, என்று மேழும் ஊக்கம் கொடுத்து அனுப்பினார் அமீர்.

தலைமை காவல் நிலையத்திலிருந்து புறப்பட்டவர் அருகிலிருந்த உணவகத்தில் தனது மதிய உணவை முடித்துக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார். சுமாராக ஐந்து மணிவாக்கில், ஒரு நிறைவான தூக்கத்தை முடித்துவிடேன் என்பதற்கடையாலமாக நெட்டி முறித்து எழுந்த மாதவன், தன் எதிர் மேஜைமிதிருந்த புகார்களை பார்த்தார்.

அழுது முடித்திருந்த அந்திமழையின் சாரல் காற்று, தன் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்திருந்த மாதவனின் முகத்தை இதமாக வருடிச் சென்றதும் தனக்குள் ஒரு புத்துணர்வு எற்படுவதை உணர்ந்தார். அவரது சிந்தனைகள் தனக்கு கொடுக்கப் பட்டிருந்த பொருப்பை நோக்கி ஓடியது. அனைத்து புகார்களும் ஒரே மாதிரியாகவும், அருகருகே உள்ள ஊர்களில் நடந்திருந்தாலும் அனைத்தும் சம்மந்த பட்ட ஒரே நபராலோ அல்லது நபர்களாலோ மட்டுமே செய்திருக்கக் கூடும் என முடிவெடுப்பது தவறு. மொட்டைத் தலைக்கும், முழங்களுக்கும் முடிச்சி போட்ட கதையாகி விடுமோ என அஞ்சினார். அவை வெவ்வேரு ஆட்களாளும் செய்யப்பட்டிருக்கலாம் அல்லவா!

சில விஷயங்கள் மட்டுமே உள்ளங்கை நெல்லிக்கனியென மாதவனுக்கு புலப்பட்டது. சம்பவங்கள் பாதிக்கப் பட்ட நபர்களை அறியாமலே நடந்திருக்கிறது. வங்கியின் சேமிப்புப் பணம் பறிபோயிருக்கிறது என்றால் முக்கிய தகவல்களான உறுப்பினர் எண் மற்றும் ரகசிய ‘பின் கோர்டுகள்’, ஆகியன அடுத்தவருக்கு தெரிந்திருக்க வேண்டும். இந்த ரகசியங்கள் தொலைவது எவ்வகையில் சாத்தியமாகும். குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வங்கி உழியர்கள் என யார் வேண்டுமானாழும் செய்திருக்கலாம். மேழும் தெளிவான தடயங்களை புரட்ட பாதிக்கப் பட்டவர்களை சந்தித்து விசாரிக்க முடிவு செய்தார்.

இறுதி நபராக குமார் விசாரனைக்கு அழைக்கப் பட்டான். “கடைசியாக இந்த ‘பேங்’ சம்மந்தப் பட்ட விபரங்களை என்ன விஷயமா பயன்படுத்துனிங்க சொல்ல முடியுமா?” என்றார் மாதவன். “கண்டிப்பா ஞாபகம் இருக்கு ‘சார்’, வியாபாரத்துக்காக ‘இன்டர்நெட்’ வழியா பொருட்கள் வாங்க பார்த்தேன், சரியான தகவல்களை கொடுத்தும் வாங்குவதற்கு  பிரச்சனையா இருந்ததால ரத்து செஞ்சிட்டேன்” என ரத்தின சுருக்கமாக தன் பதிலைக் கூறி விடைப் பெற்று சென்றான் குமார்.

“விசாரனையில் சில முக்கிய தடயங்கள் நமக்கு கிடைச்சிருக்கு, பாதிக்க பட்ட எல்லோரும் தன் பணம் காணமற் போனதை உணர்வதற்கு முன்பு, பணம் கட்டவோ, அல்லது பொருள் வாங்கவோ, இணையம் வழி வங்கிச் சேவையை பயன்படுத்திருக்காங்க. இதனால அசம்பாவிதம் நடந்திருக்கும் என நான் நினைக்கிறேன். கணினி தொழில் நுட்ப நிபுணர்களின் உதவி இருந்த என் வேலையை தொடர சுலபமாக இருக்கும்” என்று அமீரிடம் விசாரனனயின் ஆய்வை கூறினார் மாதவன். ” ‘ஓகே’ மாதவன் நாளைக்கே எற்பாடு பண்ணிடலாம்”, என்றார் அமீர். பத்திரிக்கைக்கு இந்த விசாரனை பற்றிய தகவல்களை தெரிவிக்க வேண்டமெனவும், இதனால் குற்றவாளியைக் கண்டு பிடிப்பதில் சிரமங்கள் எற்படலாமெனவும் கூறினார் மாதவன்.

      “இணையத்தின் வழி இப்படிபட்ட பிரச்சனைகள் நடக்க வாய்ப்புகள் இருக்கு ‘சார்’ , ஆனால் வங்கியின் இணைய சேவையும் பலத்த பாதுகாப்புடன்தான் செயல்படுத்தப் படுகிறது, இப்போதய நிலைமைக்கு நாம் யாரையும் சந்தேகிக்க முடியாது, பாதிக்கப்பட்டவர்கள் இறுதியாக எப்பொழுது வங்கியின் இணைய சேவையைப் பயன்படுத்தி இருக்காங்கனு  சற்று ஆராய்ந்தால் முக்கிய தகவல்களை திரட்ட வசதியாக இருக்கும்”, என்று மாதவனிடம் விளக்கிக் கூறினார் கணினி நிபுணர் அர்ஜூன்.

      அடுத்த அரைமணி நேரத்தில் பாதிக்கப் பட்ட நபர்கள் இறுதியாக இணையத்தின் வழி வங்கியுடன் தெடர்புக் கொண்டதை ஆராய்ந்து பார்த்தார் அர்ஜுன். பாதிக்கப் பட்டவர்கள்  வங்கியின் இணைய சேவையைப் பயன்படுத்தி முடித்த பின்பு அவர்களது பெயர் மற்றும் ரகசியப் பின் கோடுகளைப் பயன்படுத்தி வேறொரு கணினியின் மூலம் அவர்களது வங்கி கணக்கு வழக்குகள் மறுபடியும் திறக்கப் பட்டிருந்தது. பாதிக்கப் பட்டவர்கள் கூறிய திகதி மற்றும் நேரத்திற்கு பிறகும் இணையம் வழி வங்கியின் கணக்கு வழக்குகள் பார்வையிட பட்டிருந்தது. இதை விட சுவாரசியமாக புகார் கொடுத்தவர்கள் அனைவரது கணக்கு வழக்குகளும் ஒரே இணைய சேவையின் மூலம் திறந்து பார்வையிடப் பட்டிருந்ததே. “இந்த ‘IP Address’ எந்தத் தொலைபேசி தொடர்பின் வழி இணையத்தில் இணைக்கப் பட்டிருக்கிறது என்பதை வைத்து நாம் அவர்களின் முகவரியை அறிந்து கொள்ள முடியும்”, என்ற திருப்தியான பதிலை மாதவனிடம் கூறினார் அர்ஜுன்.

      முகவரியை அறிந்து கொண்ட மாதவன் மேலும் சில காவல் அதிகாரிகளுடன் புறப்பட்டார். ஒரு அடுக்கு மாடி குடியிருப்புப் பகுதியில்  தன் வாகனத்தை நிறுத்தி வைத்தவர், தன் சக நண்பர்களுடன் தேடி வந்த வீட்டை நோக்கிச் சென்றார். கதவைத் தட்டியவுடன், இருபது வயது மதிக்கதக்க இளைஞன் வெளியே எட்டிப் பார்த்தான். மாதவன் தான் விசாரனைக்கு வந்துள்ளதாக சொல்வதற்கு முன்பே, தன் நண்பர்களிடம் ‘போலீஸ்’ என கூச்சலிட்டு தன்னுடன் இருந்த இரு நண்பர்களுடன் தப்பிக்க முயன்றான். போலிசாரின் தர்ம அடிகளுடன் மூவரும் கைது செய்யப் பட்டார்கள். அவர்களது குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப் பட்ட பொருட்கள் அனைத்தும் கைபற்றப் பட்டன.

      விசாரனையின் போது தங்கள் குற்றங்களை ஒப்புக் கொண்ட அந்த மூவரும் படித்து முடித்த பின்பு வேலையில்லாததால் இந்த குற்றத்தை புரிய தூண்டுதளுக்கு ஆளாகியிருக்கிறார்கள். வங்கியின் இணைய அகப்பக்கத்தை போன்ற போலி அகபக்கத்தை  உறுவாக்கி, தவறுதலாக அதில் நுழையும் பயனிட்டாளர்களின் முக்கிய தகவல்களை திரட்டியுள்ளார்கள். அந்த தகவல்களின் அடிபடையில், இணையம் வழி கணக்கு வழக்குகளை ஆராய்ந்து, சட்டவிரோத முறையில் போலி வங்கி அட்டைகளை செய்து பணத்தைத் திருடியிருக்கிறார்கள், என திரு.அமீரிடம் தெள்ளத் தெளிவாக குறிப்பிட்டு சமர்பித்தார் மாதவன்.

      தொழில் நுட்பத்தின் பரிணாம வளர்ச்சி, குற்ற செயல்களையும் அதிகரிக்கவே செய்துள்ளது. மக்களிடம் விழிப்புணர்வு இருந்தால் குற்றச் செயல்களை தடுக்க முடியும், என பொறிக்கப் பட்டிருந்த பத்திரிக்கை செய்தியை பாடித்த மாதவன், பச்சை விளக்கு விழுந்தவுடன் பத்திரிக்கையை பக்கத்து இருக்கையில் வைத்துவிட்டு தன் காரை செலுத்தினார். நிறைவாக வேலையை முடித்தத் திருப்தியுடன் ஊருக்குச் சென்று கொண்டிருக்கிறார் மாதவன்.

முற்றும்.

எண்ணம், எழுத்து; 

-விக்னேஷ்வரன் அடைக்கலம்-

Read Full Post »